தளபதி விஜய் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே உள்ளது. இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாகவும் அதில் முக்கிய இயக்குனர்கள் சங்கர் அட்லி மற்றும் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்க உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழாவிற்காக தற்போது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மேடை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது, குறிப்பாக விஐபி வருகைக்கான வரவேற்பு வளைவுகள் அரங்கம் முழுதும் வண்ண மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் மற்றும் செட் பிராப்பர்ட்டி தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
மேலும் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று ரசிகர்கள் ஆலோசனை கூட்டத்திலும் இசை வெளியீட்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது