கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக் காடானது. வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில், தங்களது முக்கிய ஆவணங்களை மக்கள் பறிகொடுத்தனர். இதனால், நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது, வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.