திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பிரேம்குமார் (57) இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இவரது மனைவி விஜிலா இவரும் மருத்துவராக இருக்கிறார் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வருகிறார். இதற்காக விஜிலா தன்னுடைய மகளுடன் சென்னையில் தங்கியிருக்கிறார்.
இத்தகைய நிலையில், பிரேம்குமார் தன்னுடைய மருத்துவமனைக்கு விடுமுறை வழங்கிவிட்டு ஒரே வளாகத்தில் உள்ள தன்னுடைய வீட்டையும், மருத்துவமனையையும் பூட்டிவிட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி பயணம் ஆனார். நேற்று காலை பிரேம்குமார் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில், கிடந்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும், மருத்துவர் பிரேம்குமாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் எல்லாம் காணாமல் போயிருந்தது. இந்த நிலையில், மருத்துவர் பிரேம்குமாரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்ட போது அந்த லாக்கரில் 100 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
அதோடு மகளின் மருத்துவ படிப்பு செலவுக்காக திருவாரூரில் உள்ள 3 வீட்டு மனைகளை சமீபத்தில் விற்பனை செய்து அதற்கான 40 லட்சம் ரூபாய் பணத்தை மற்றொரு அறையில் உள்ள லாக்கரில் வைத்திருந்ததாக கூறினார். ஆனால் அந்த லாக்கர் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டு இருக்கிறதா? என்ற விவரத்தை காவல்துறையினர் கூறவில்லை.
இதற்கு நடுவில் சென்னையில் இருந்து பிரேம்குமார் நேற்று மாலை திருத்துறைப்பூண்டிக்கு வந்து சேர்ந்தார். அவரிடம் காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அத்துடன் அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹரின் உத்தரவின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.