தலைநகர் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் மாதம் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகளை கட்டமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதோடு, 110 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறது. இந்த செவிலியர் கல்லூரிகள் தமிழகத்தில் புதிதாக தற்சமயம் ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளின் வளாகத்தில் ஆரம்பிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த கல்லூரிகளில் நடப்பு ஆண்டு அல்லது எதிர்வரும் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கல்லூரியில் 100 சதவீதம் பேர் என்று 1100 பேர் செவிலியர் படிப்பை படிப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.