கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து கடந்த வருடம் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது காவல்துறையின் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தி இருந்தார்கள் கலவரக்காரர்கள். பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவரம் குறித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி தொடர்ந்து, நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவரம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் 1152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். 9 மாத விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த குற்றப்பத்திரிகையில் கள்ளக்குறிச்சி மாணவர் ஸ்ரீமதி மரணம் தற்கொலை தான் ஆளிலிருந்து தொந்தரவு மற்றும் கொலைக்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என்றும் சாட்சிகள் தெரிவித்ததாகவும், குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என்றும், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.
சக மாணவர்கள் சாட்சியம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என்று தெரியவந்தது எனவும், மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதி விடுதியை நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் முறையாக பெறவில்லை என்றும் மாணவி உயிரிழந்த அன்றே இறப்புக்கான காரணத்தை காவல்துறை கூறியிருந்தால் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என்றும், தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தை தனியார் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி பின்பற்றவில்லை என்பதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.