முன்பெல்லாம் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு செல்லும்போது எங்கு சென்றாலும் எல்லோரும் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினரால் எச்சரிக்கைவிடுக்கும் ஒலிபெருக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அந்த வழக்கம் இப்போதும் கூட தொடரத்தான் செய்கிறது. ஆனாலும் காவல்துறையினர் பொதுமக்களை எவ்வளவு தான் உஷார் படுத்தினாலும், பொதுமக்களின் கவனக்குறைவு காரணமாக, பல பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் சொந்த வீட்டில் இருப்பதற்கு கூட எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பல சமயங்களில், பல சம்பவங்கள் உணர்த்திச் சென்று இருக்கின்றனர்.
அந்த வகையில், ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா(48) மாட்டின் ராஜா பத்தல பள்ளியில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பாஸ்கல் ஜோஸ்வினா (45) இந்த தம்பதிகளுக்கு நோயல் கிங்ஸ்லி(20) என்ற மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தான் மார்டின் ராஜா தன்னுடைய மகனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொருட்களை வாங்குவதற்கு நேற்று முன்தினம் மாலை கடைக்குச் சென்றார். வீட்டில் பாஸ்கல் ஜோஸ்வினா அவருடைய மாமியார் லார்டு மேரி, மாமனார் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் இருந்தனர். இரவு சுமார் 7.30 மணியளவில் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்த 25 வயது இளைஞர்கள் 3 பேர் வீட்டின் கதவை திடீரென்று உட்புறமாக தாழிட்டனர். அதன் பிறகு சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.
பிறகு பாஸ்கல் ஜோஸ்வினா, லார்டு மேரி மற்றும் 2 மகள் உள்ளிட்டோரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை என மொத்தம் 16 சவரன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். வீட்டிற்கு வெளியே வந்தபோது மார்ட்டின் ராஜா தன்னுடைய மகனுடன் வீட்டிற்குள் நுழைந்தார். வெளியே வந்த அந்த மூவரிடமும் அவர் இடைமறித்து விசாரித்தபோது, இரும்பு கம்பியால் அவரை கடுமையாக அடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் படுகாயமடைந்த மார்ட்டின் ராஜா ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஓசூர் அட்கோ காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.