தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆரம்பித்துள்ளார். குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக கடந்த 7ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் புகையிலை மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது குறித்து 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 909 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர்ஜிவால் தெரிவித்ததாவது சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்து வருபவர்கள் உள்ளிட்டோர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதோடு தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.