மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கடந்த மாதம் 29-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் பிணம் பாதி அளவு எரிந்த நிலையில் கிடப்பதாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தகவல் வந்ததும், மேலூர் துணை மேற்பார்வையாளர் பிரபாகரன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்தது. இதனால் அந்த பெண் யார், எந்த ஊர், என கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை பிடிக்க மதுரை மாவட்ட காவல்துறை மேற்பார்வையாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் மேலூர் துணை மேற்பார்வையாளர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் காணாமல் போன இளம்பெண்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் கொலையான புகைப்படங்களை சுவர்களில் ஒட்டினர்.
இதை பார்த்து தங்களது மகளை காணவில்லை என ஒரு பெற்றோர் காவல் நிலையம் வந்தனர். அவர்கள் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் தாலியை பார்த்து அது தங்கள் மகள்தான் என சொன்னதால் காவல்துறையினர் இந்த வழக்கில் அவரது கணவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பஞ்சயம்பட்டியை சேர்ந்த ராசு மகன் அர்ச்சுனன்(25). சென்னையில் இடியாப்பம் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி மனைவிகள் பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் கருத்தலக்கம்பட்டி புதூரை சேர்ந்த ராஜாத்தி(19) என்பவரை மூன்றாவதாக காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது. இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அர்ச்சுனன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த 28-ந் தேதி சென்னையிலிருந்து மனைவியை அழைத்து கொண்டு ஊருக்கு வந்துள்ளார். நள்ளிரவில் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நான்கு வழிச்சாலையில் கணவன், மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் பஸ்சில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது அங்கு அர்ஜுனனின் தாய், தந்தை வந்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து பொட்டப்பட்டி வழியாக சொந்த ஊருக்கு சென்றனர். செல்லும் வழியில் தென்னந் தோப்பிற்குள் ராஜாத்தியை அழைத்து சென்ற அர்ச்சுனன் அவரை கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். அடையாளம் தெரியாமல் இருக்க தீ வைத்து எரித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் தன்னுடைய குழந்தையை தனது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு அர்ச்சுனன் சென்னைக்கு சென்று விட்டார்.
மறுநாள் ராஜாத்தியை காணவில்லை என அவரது பெற்றோரிடம் அர்ச்சுனன் சொல்லியுள்ளார் . இதையடுத்து அவர்கள் தங்கள் மகளை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில் போலீசார் ஒட்டியிருந்த புகைப்பட சுவரொட்டியை பார்த்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து படத்தில் தனது பெண் அணிந்திருந்த தாலியின் கடை முத்திரையை அடையாளம் காட்டினர். அதன் பின்னர் அது காணாமல் போன தங்கள் மகள் தான் உறுதியாக கூறினர். இதையடுத்து அவரது கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர் மனைவியை ஊருக்கு அழைத்து வரும்போது தென்னந்தோப்பில் வைத்து கொன்றதுதெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கணவர் அர்ச்சுனன், மாமனார் ராசு(50), மாமியார் அரியம்மாள்(48), உறவினர் சடவேலம்பட்டி வல்லான் என்ற ரவி (42), பஞ்சயம்பட்டி சிவலிங்கம் (39) என ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.