சேலம் மாவட்டம், குமாரசாமிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (29). இவர் தமிழ்சங்கம் ரோடு பகுதியில் இருக்கும் ஒரு கார் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். சீரங்கன்பாளையம் ராம் நகர் பகுதியை உள்ளவர் ரவுடி சீரங்கன். கடந்த சில மாதங்களுக்கு முன் ரவுடி சீரங்கனுக்கும், முரளிக்கும் தகராறு நடந்துள்ளது. அப்போது சீரங்கன் முரளியை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முரளி அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் முரளி மீது சீரங்கன் ஆத்திரத்தில் இருந்து வந்ததுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சீரங்கன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் முரளி வேலை செய்யும் வெல்டிங் பட்டறைக்கு வந்து வேலை செய்துகொண்டிருந்த முரளியிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அரிவாளால் முரளியை வெட்ட முயன்றனர். இதனால் முரளி, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்திய அவர்கள் முரளியை ஓடஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டினர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் லட்சுமி பிரியா தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முரளியை வெட்டிய கும்பல் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), தமிழ்செல்வன் (30), குமாரசாமிப்பட்டியை சேர்ந்த ரவுடி துரை (45) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சீரங்கன் உள்ளிட்ட இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.