தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையில் வெயில் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழ்நிலையில், நேற்று இரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. கோயம்பேடு, திருமங்கலம், சென்ட்ரல், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி போன்ற பல்வேறு இடங்களில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. உத்தனப்பள்ளி தொகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் அந்த பகுதி மக்கள் உற்சாகத்துடன் அவற்றை பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். சூளகிரி, பேரிகை போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்ப சூழ்நிலை தணிந்த நிலையில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. பெரியகுளம், முருகமலை, வடுகப்பட்டி, லட்சுமிபுரம், சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
சேலத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, பொண்டலாம் பட்டி போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
அதேபோல கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் இதமான சூழ்நிலை நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.
இதற்கு நடுவே கொடைக்கானல் மலைப்பகுதிகளான அப்சர்பேட்டரி, எரிச்சாலை, கீழ்பூமி மூஞ்சிக்கல், ஆனந்தகிரி போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், அருமனை, மார்த்தாண்டம், குழித்துறை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.