குமரி மாவட்டம் கொட்டாரம் அச்சன்குளம் ஓடைத்தெருவில் வசித்து வருபவர் விவசாயி ராமகிருஷ்ணன் (52). இவரது மனைவி ராஜாத்தி(42). இவர்களுக்கு அரவிந்த்ராஜா(24), சுரேஷ்ராஜா( 22) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரவிந்த்ராஜா பி.ஏ. முடித்து உள்ளார். அதேபோல இவரது இளைய மகன் சுரேஷ்ராஜாவும் பி.ஏ. முடித்துவிட்டு அடுத்த மாதம் வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் அச்சன்குளம் மங்கம்மாள் சாலையில் வைத்து இளையமகன் சுரேஷ்ராஜாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் செந்தில்குமார் மகன் சாம்சன்மனோ(18) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் கால்வாயில் விழுந்து கிடந்த சுரேஷ்ராஜாவை, சாம்சன்மனோ கடப்பாறையால் தலையில் சரமரியாக அடித்துள்ளார். இதில் சுரேஷ்ராஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேஷ்ராஜாவின் உடலை மீட்டு ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த சாம்சன்மனோவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.