ஒடிசா மாநிலம் ரயகடா மாவட்டம் ஒசபடா கிராமத்தில் வசித்து வருபவர் ரசிக பிரதான். இவர் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரீமா மஜ்ஹி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை காதலிக்கும்படி ரீமாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், ரீமாவின் பெற்றோரிடம் சென்று திருமணம் செய்துவைக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், பிரதானை காதலிக்க ரீமா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
அதேபோல், பிரதானுக்கு ரீமாவின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒசபடா என்ற கிராமத்தில் ரீமா நேற்று கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த பிரதான் தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் ரீமாவை வற்புத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் சம்மதிக்காததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரதான் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரீமாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் ரீமா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க வந்த சக கட்டிட தொழிலாளர்களையும் பிரதான் தாக்கியுள்ளார்.
அதன் பிறகு, தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ரீமா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், பிரதான் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.