உண்மையிலேயே இளம் வயது என்பது ஒரு இக்கட்டான சூழ்நிலை நிறைந்தது. இந்த இளம் வயதில் ஆண் பெண் உள்ளிட்ட இரு பாலரும் பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பலர் திருமணம் முடிவடைந்த பின்னரோ அல்லது பதின் பருவ வயதை கடந்த பின்னர்தான் ஒரு மனிதருக்கு பொறுப்பு என்பது வந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஆனால் இளம் வயதிலேயே பல பொறுப்புகளை தங்கள் தோள் மீது சுமந்து நிற்கும் இளம் தலைமுறையினர் பற்றி யாருமே சிந்திப்பதில்லை.
இந்த இளம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், குடும்பத்தையும் கட்டி காக்க வேண்டும். படிப்பு முடிந்து வேலை தேடி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும். அத்தனை பொறுப்புகளும் இந்த இளம் வயதில் இருப்பவர்களின் தோள் மீது தான் இருக்கிறது.
ஆனால் இத்தனை பொறுப்புகளையும் கடந்து இன்னொரு விடயமும் இருக்கிறது. இதே இளம் பருவத்தில் தான் காதல் என்பதும் வரும். அந்த காதலை சரியாக கையாள முடியாத பலர் பல விபரீதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
பதின் பருவ வயதை அடைந்து விட்டால் இளம் தலைமுறை நருக்கு காதல் அரும்ப தொடங்கி விடுகிறது. அப்படி காதல் என்ற உலகில் அவர்கள் அடி எடுத்து வைத்து விட்டால் அந்த காதலை தவிர்த்து அவர்களுடைய கண்களுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை.
காதல் என்பது ஒரு அழகான உணர்வு தான். அந்த உணர்வு ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய வாழ்க்கையில் நம்மை முன்னேறி செல்ல வேண்டும் என்ற நம்முடைய முயற்சிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருப்பது தான் உண்மையான காதல்.
ஆனால் தற்சமயம் இருக்கக்கூடிய இளைஞர்களிடையே காதலில் சரியான புரிதல் இல்லாததால் பல விபரீத முடிவுகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சார்ந்த 17 வயது மாணவி ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த தனியார் ஐடிஐ மாணவர் சக்திவேல் என்ற இளைஞருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சக்திவேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வித்தியாசமான காணொளியை பதிவிட்டு வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவி சக்திவேலை பின்தொடர்ந்து வந்தார். இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த காதல் ஜோடியின் காதல் விவகாரம் இருதரப்பு வீட்டினருக்கும் தெரிய வந்தது. படிக்கும் வயதில் எதற்காக காதலிக்கிறீர்கள்? என்று பெற்றோர்கள் கண்டித்ததால் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
தங்களுடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த இந்த இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்தனர்.
அதன்படி ஆரணி அருகே வடமாதிமங்கலம் ரயில் நிலையம் அருகே இருக்கின்ற ரயில்வே தண்டவாளம் பகுதியில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் திருப்பதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் இளம் காதல் ஜோடியின் உடல் பாகங்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காட்பாடி ரயில்வே காவல்துறையினர் ரயிலில் பாய்ந்து சின்னாபின்னமாக கிடந்த காதல் ஜோடியின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அருகே இன்ஸ்டாகிராமில் காதலிக்க தொடங்கிய இளம் காதல் ஜோடி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.