சென்ற வருடம் ஜூலை மாதம் 16ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் என்று கூறப்படுகிறது. கட்சி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவை எடப்பாடி பழனிச்சாமி வசம் செல்லும் சூழல் ஏற்படலாம்.
அத்துடன் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதும் உறுதி செய்யப்படும். தமிழகத்தில் அரசியல் களத்தில் பன்னீர்செல்வம் மற்றும் அவரால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் நிலைமை மிகவும் கேள்விக்குறியான நிலைக்கு செல்லும் அதே சமயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்தால் மறுபடியும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீடிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கும். எம்ஜிஆர் ஆல் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலின் அடிப்படையில், கட்சியின் தொண்டர்களை பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலையும் ஏற்பட்டிருக்கும்.
அத்துடன் அதிமுகவில் சென்ற வருடம் ஜூலை முதல் 7 மாதங்களாக நிலவி வரும் இந்த மிகப்பெரிய குழப்பத்திற்கு தற்போது நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு ஒரு விடிவுகாலமாக அமைந்திருக்கிறது.
அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே அதிகரித்து இருக்கிறது.
இதை தவிர்த்து நான்தான் அதிமுகவின் பொதுசெயலாளர் என்று தெரிவித்து வரும் சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரியின் நிலை தொடர்பாகவும் தற்போது கேள்விகள் எழுந்திருக்கின்றன.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் இந்த ஒற்றை தீர்ப்பின் மூலமாக அதிமுகவை தன்னுடைய விரல் நுனியில் வைத்திருக்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.