ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது, ஆங்காங்கே நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக ஏடிஎம் மையங்களில் இரவு சமயங்களில் வாட்ச்மேன்கள் இருப்பார்கள்.
ஆனால் ஒரு சில ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இருப்பதில்லை. இதனை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏடிஎம் மையங்களில் புகுந்து ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பணத்தை திருடிச் சென்று விடுவார்கள்.
அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்றிருக்கிறது. திருவண்ணாமலை நகர பகுதியில் மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே சமீபத்தில் தான் வங்கியில் இருந்து பணம் நிரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்கு திடீரென்று புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து இருக்கிறார்கள். அந்த ஏடிஎம் மையத்திலிருந்து 33 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்று இயந்திரத்தையும் தீயிட்டு கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
அதேபோல போளூர் ரயில் நிலையம் பகுதியில் செயல்பட்டு வந்த ஏடிஎம் மையம் ஒன்றினுள் புகுந்த மர்மகும்பல் வெல்டிங் இயந்திரம் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளையடித்து கொண்டு அதன் பிறகு ஏடிஎம் இயந்திரத்தை கொளுத்தி விட்டு தப்பிச்சென்றனர். அதே நேரம், கலசப்பாக்கம் பகுதியில் இருக்கின்ற ஒரு ஏடிஎம் மையத்தின் உள்ளே புகுந்த மர்மகும்பல் ஒன்று, வெல்டிங் இயந்திரத்தின் மூலமாக கொள்ளை அடித்துக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை கொளுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
ஒரே சமயத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அடுத்தடுத்த சம்பவங்கள் அந்த மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2️ சம்பவங்களிலும் ஒரே கும்பலை சார்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்