சென்னை, மாமல்லபுரத்தில் வருகிற 28- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை 44 வது செஸ் ஒலிம்பியாட், 2022 வருடத்தின் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளிக்கல்வித்துறை இனைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த செஸ் போட்டிகளில் 225 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஐயாயிரத்நுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.