திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி(42). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்த நிலையில், கோவையில் தங்கி அவர் வேலை பார்த்து வந்தார். இத்தகைய நிலையில், பெயிண்டராக வேலை பார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த கணேசன்( 30) என்பவருடன் உமாராணிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கணேசனுக்கும், உமாராணிக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததால் உமாராணி கோபித்துக் கொண்டு, அவருடைய சொந்த ஊரான தேவநாயக்கன்பட்டிக்கு சென்று விட்டார். இதனை அறிந்து கொண்ட கணேசன், கோவையிலிருந்து உமாராணியை சந்திப்பதற்காக தேவநாயக்கன்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அங்கும் இருவருக்கும் மறுபடியும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான காளிதாஸ் (27) என்பவரை உமாராணி கணேசனை அழைத்துக்கொண்டு கோவைக்கு பேருந்து ஏற்றிவிட்டு வருமாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி காளிதாஸ் கணேசன் அழைத்துக் கொண்டு வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். செல்லும் வழியில் இருவரும் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடையில் மது வாங்கி அருகே உள்ள பகுதியில் அமர்ந்து குடித்திருக்கிறார்கள் அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, காளிதாஸ் கணேசன் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கணேசன் போன் செய்து தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு உமாராணி ஒரு வாடகை காரில் அவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு அருகே சென்று காரில் அமர்ந்தபடி சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது கணேசன் தான் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து காளிதாசின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி சென்றார். இதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று காளிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.