வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவில் வசித்து வருபவர், சதீஷ்குமார் (20). இவர் வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் நன்றாக பழகிவந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் போருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆவேசமாக பேசிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த பேருந்து நிலையத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியை குத்திய பின்பு மாணவர் சதீஷ்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார். பிறகு சதீஷை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இது குறித்த தகவலறிந்த திருவலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாணவர் சதீஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமார் கூறுகையில், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். திடீரென அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவர் வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசிவருகிறார் உள்ள. அவர் அந்த மாணவரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி நான் கேட்டபோது அவர் சரியாக பதில் சொல்ல வில்லை. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்ததால் நான் மாணவியை கத்தியால் குத்தினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து மாணவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இன்று காலையில் திருவலம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.