மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மத்திய மண்டலத்தில் இருக்கின்ற மாவட்டங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மது வகைகளை ஒழிப்பதற்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் இருக்கின்ற நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் நிரந்தரமாக 8 பகுதிகளில் இருக்கின்ற எல்லை சோதனைச் சாவடிகளுடன் தற்போது பல பகுதிகளில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக, கடந்த 3 தினங்களில் மட்டும் திருச்சியில் 102, புதுக்கோட்டையில் 90, கரூரில் 159, பெரம்பலூரில் 73, அரியலூர் 70, தஞ்சையில்149, திருவாரூரில் 143, நாகப்பட்டினத்தில் 96, மயிலாடுதுறையில் 77, என்று ஒட்டுமொத்தமாக 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 962 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து சுமார் 19,162 லிட்டர் புதுச்சேரி சாராயம், 102 லிட்டர் கள்ளச்சாராயம், 1389 லிட்டர் சாராய ஊரல்கள் 450 லிட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை தவிர்த்து சட்டவிரோதமாக சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்ட 1268 லிட்டர் மது வகைகளும், 15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து மே மாதம் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், கள்ளத்தனமாக சில்லறை விலையில் மதுவை விற்பனை செய்பவர்கள் என ஒட்டு மொத்தமாக 13,331 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 13,508 பேர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இவர்களில் 31 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய மண்டல மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர் தேடுதல் சோதனை நடத்தப்படும் என்றும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டோர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் கார்த்திகேயன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.