சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பூர் கக்கஞ்சி காலனி பகுதியில் இருக்கின்ற தன்னுடைய அலுவலகத்தை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த 8க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இளங்கோவனை வழிமறித்தது.
இதன் காரணமாக, தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய இளங்கோவனை அந்த கும்பல் கண்ணிமைக்கும் சமயத்தில் சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பியம் காவல்துறையினர் இளங்கோவையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலை நடந்ததற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, அதிமுகவின் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்று கூடினர்.
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோட குற்றவாளிகளை கைது செய்த பிறகு தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தார்கள். இத்தகைய நிலையில், கஞ்சாபோதையில் தன்னுடைய வீட்டின் அருகில் சுற்றித்திரிந்த சில நபர்களை உயிரிழந்த இளங்கோவன் தட்டி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஆகவே அதிமுகவின் பகுதி செயலாளர் இளங்கோவன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். இதில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய், கணேஷ், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஒரு ஆட்டோ உள்ளிட்டவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.