சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியில் குடியிருபவர் பிரபாகர். இவருக்கு ஷியாம் என்று ஒரு மகன் இருக்கிறார். ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அறையில் ஏ.சி.இயங்கி கொண்டிருந்ததால் அந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தார் ஷியாம்.
இரவு நேரத்தில் ஷியாம் படுத்து இருந்த அறையில் இருந்து புகை வெளிவந்ததை கண்ட தந்தை பிரபாகர், பயந்து போய் அறை கதவை உடைத்து பார்த்தபோது தீ காயங்களுடன் அவரது மகன் ஷியாம் அலறியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஷியாம் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்ற முயன்றார். அதற்குள் ஷியாம் படுக்கையில் கருகிய நிலையில் உயிரிழந்தார்.
அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஏ.சி.வெடிப்புக்கு மின்கசிவு காரணமா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்றிரவு நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.