டெல்லி உத்தம நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய வயது 17. இவர் வீட்டிலிருந்து தன்னுடைய தங்கையுடன் பள்ளிக்கு சென்று கொண்டுள்ளார்.அப்போது அந்த வழியாக இருவர் பைக்கில் முகமூடி அணிந்து வந்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
ஆசிட் வீசியதால் படுகாயமடைந்த மாணவி, டெல்லியில் உள்ள சதாஜன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நடுரோட்டில், பட்ட பகலில் மாணவி ஒருவர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் சில அதிர்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா(20) என்ற இளைஞர்
தான் இதை செய்ததாகவும், அந்த இளைஞருக்கும், மாணவிக்கும் இடையே வெகு நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அந்த மாணவி சச்சினுடன் பேச மறுத்து காதலுக்கு பிரேக் அப் சொன்னதாகவும், கடந்த 3 மாதங்களாக பேசாமல் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த சச்சின் மாணவியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதற்காக அந்த இளைஞர் ஆன்லைன் மூலம் பிலிப்கார்டிலிருந்து ஆசிட் வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் போலீசிலிருந்து தப்பிப்பதற்காக தன்னுடைய வாகனத்தையும், செல்போனையும் தன்னுடைய நண்பரிடம் கொடுத்துவிட்டு, அவனுடைய மற்றொரு நண்பரான ஹர்ஷித் அகர்வால் என்பவரின் வண்டியை எடுத்து வந்து மாணவி மீது ஆசிட் வீசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சச்சின் மற்றும் அவரது 2 நண்பர்களையும் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவிக்கு உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை எனவும், முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்