நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள விழுந்தமாவாடியை சேர்ந்த புல்லட் மகாலிங்கம் என்கின்ற மகாலிங்கம். (56) திமுகவைச் சார்ந்த இவர் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய மகன் அலெக்ஸ் (31) கீழையூர் ஒன்றிய குழு திமுகவின் உறுப்பினராக உள்ளார்.
இத்தகைய நிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விழுந்தமாவாடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். ஆனால் அவருடைய வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்ற படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸ் உள்ளிட்டோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு அவர்களை காவல் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சென்னையிலிருந்து கடலூருக்கு வந்திருந்த தேசிய போதை பொருள் தடுப்பு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதவது தலைநகர் டெல்லியில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஒரு காரில் இருந்து ஐஸ் மச்சா என்ற போதை பொருளை சமீபத்தில் பறிமுதல் செய்தனர் அந்த கார் ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த ஓட்டுனர் அந்த போதை பொருளை நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கத்திடம் ஒப்படைக்க உள்ளதாக கூறி இருக்கிறார்.
ஆகவேதான் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸ் உள்ளிட்டோரை கைது செய்து அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.