கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்பு புயலாக வலுவடைந்து அதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு ஆறுகள், நீர் தேக்கங்கள், அணைகள் உள்ளிட்டவற்றில் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது.
தலைநகர் சென்னையின் நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் மாநில அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.அதனடிப்படையில் கடந்த 9ம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடந்தது. ஆகவே காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, ஏரிகளுக்கு மறுபடியும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தான் தலைநகர் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருப்பதால் பூண்டி ஏரியிலிருந்து கொஸஸ்த்தலை ஆற்றில் 10,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் உபரி நீர் திறப்பு 5,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரித்திருப்பதால் கொஸஸ்த்தலை ஆற்றின் கரையோரத்தில் இருக்கின்ற 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.