உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் தனது உறவினர் வீட்டில் 22 வயது இளம்பெண் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினரை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றவர் பிறகு உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் சூப்பிரெண்டு சூரியகாந்த் திரிபாதி கூறும்போது, இளம்பெண் அவரது மாமாவின் வீட்டில் தங்கி படித்து வந்தார். அப்போது, 28 வயது ஓட்டுனர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பெண் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
எனவே கருவை கலைக்க வற்புறுத்தி, அவரை வாரணாசியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அந்த ஓட்டுனர் அழைத்து சென்றுள்ளார். அப்போது சில மருந்துகளை கொடுக்க முயற்சித்ததில், சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, உடனடியாக அந்த பெண்ணை அழைத்து கொண்டு வாரணாசியில் இருக்கும் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யும் போது அந்த பெண் உயிரிழந்து விட்டார் என எஸ்.பி. திரிபாதி தெரிவித்து இருக்கிறார். இதன்பிறகு, அவரது நண்பர் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை மறைக்க அந்த வாலிபர் முயன்றுள்ளார். அப்போது, பிடிபட்ட அவர்கள் பின்பு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி மற்றும் அதிக அளவில் ரத்த இழப்பு ஆகியவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கில், ஓட்டுனர்,அவரது நண்பர், தனியார் மருத்துவமனையின் மூத்த அதிகாரி மற்றும் மருத்துவர் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.