ரஷ்யாவில், பத்து மற்றும் அதற்கு அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை விட ஐந்து மடங்கு பரப்பளவு அதிகம் கொண்ட ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியே 51 லட்சம் தான் உள்ளது. ரஷ்யாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைவாக இருக்கும் சூழ் நிலையில் கடந்த சில வருடங்களாக குழந்தை பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருகிறது.
குறிப்பாக நடப்பாண்டில் மட்டும் குழந்தை பிறப்பு எண்ணிக்கை நான்கு லட்சம் குறைந்துள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு குறைவு. 2020-ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரஷ்யாவில், பத்து மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு ஒரு மில்லியன் ரூபிள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் ரூபாய் ஆகும்.மேலும், பரிசு தொகை மட்டுமின்றி மதர் ஹீரோயின் என்ற பட்டமும் வழங்கப்படும். அத்துடன் ரஷ்ய கொடி பொருத்திய தங்க பதக்கமும் வழங்கி கவுரவிக்கபடுவர். ரஷ்யாவில் இதுபோன்ற பரிசு அறிவிக்கப்படுவது முதல்முறையல்ல.
சோவியத் ரஷ்யாவாக இருந்தபோது இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை சரிசெய்ய 1944-லில் அப்போது இருந்த அதிபர் ஜோசப், இதே மதர் ஹீரோயின் பரிசு திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது நான்கு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த பரிசை பெற்றுள்ளனர். 1991-ல் சோவியத் கூட்டமைப்பு உடைந்த போது இந்த பரிசு நிறுத்தப்பட்டது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் இந்நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.