சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் ஒரு புகார் மனுவை வழங்கி இருந்தார். அந்த புகார் மனுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த ரவி என்பவரிடம் 11 லட்சம் ரூபாய் வழங்கினேன்.
ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமல் அவர் அலைக்கழிக்கிறார் என்றும், பணத்தை திருப்பி கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருக்கின்ற வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட விசாரணையில் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. ஆகவே அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 10 வருட காலம் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர் விஜயபாஸ்கர். அவரிடம் உதவியாளராக இருந்த ரவி என்கின்ற டைப்பிஸ்ட் ரவி பணியிட மாற்றம் செய்து தருவதாகவும், மருத்துவ கல்லூரிகளில் சீட்டு வாங்கி தருவதாகவும், தெரிவித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது ஆனால் இந்த மோசடிக்கும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.