திருவனந்தபுரம், 13 வயது சிறுமியை அவருடைய அண்ணன் கர்பமாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்றுவலி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி சென்றபோது, அந்த சிறுமி 30 வார கர்ப்பம் என்பது தெரியவந்தது.
அதன் பிறகு, கர்ப்பத்தை கலைப்பதற்காக, கேரளா உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கான மனுவை, அந்த சிறுமியின் தாயார் தாக்கல் செய்தார். அந்த மனுவில் இளம்வயதில் கர்ப்பத்தை சுமப்பதால், உடல் மற்றும் மன ரீதியான உளைச்சல்களும், உளவியல் ரீதியான தாக்கங்களும் ஏற்படும் என்பதால், கர்ப்பத்தை கலைக்க அனுமதியளிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, 1971-ஆம் வருடத்தின் மருத்துவ கருவுறுதல் சட்டத்தின் கீழ் கருகலைப்பிற்கு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கர்ப்ப காலம் 24 வாரங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி வி.ஜி. அருண் இதுகுறித்த உத்தரவில், சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு, கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக சுமக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய சிறுமியின் தாய் சம்மதம் அளிக்க வேண்டும். அதேசமயம் குழந்தை பிறக்கும் போது உயிருடன் இருந்தால் அதற்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்து பாதுகாக்க வேண்டும். மனுதாரர் குழந்தையின் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லையென்றால் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் நலன் கருதி அரசே நேரடியாக உதவ வேண்டும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கின் பின்னணி, சமூக தாக்கங்கள் குறித்து பெரிதும் கவலைகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இப்போதெல்லாம் பல குற்றங்களுக்கு, நெருங்கிய உறவினர்களே காரணமாக உள்ளனர். அதனாலேயே குழந்தை கர்ப்பங்கள் குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எளிதில் கிடைத்துவிடுகிறது. இவையெல்லாம் சிறுமிகளிடையே மனக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, குழந்தைகள் இணையத்தில் ஆபாச படங்களை பார்க்காமல் இருப்பதை, பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
இளம் தலைமுறையினருக்கு தவறான எண்ணங்கள் மனதில் பதிந்துவிடுவதால், இணையதளம் மட்டுமின்றி சோஷியல் மீடியாக்களையும் சரியாகவும், பாதுகாப்பவும் பயன்படுத்துவது குறித்து குழந்தைகளுக்கு சொல்லித்தருவது அவசியம். அதேசமயம், பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வியையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் இன்று வந்துவிட்டது.
பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குழந்தைகளுக்கு விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் சிறுமியருக்கு சிகிச்சை அளிப்பதிலும், அவர்களை கையாளுவதிலும் மருத்துவமனைகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்” என்றார்.