கடந்த 2014ஆம் வருடம் திருப்பூரில் தங்கி இருந்து டைலராக வேலையை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை அண்டை வீட்டில் வசித்து வந்த தண்டாயுதம் என்ற கண்ணன் உள்ளிட்ட ஒருசிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கண்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்து அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் மனம் தளராத அந்த சிறுமியின் தாய் இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக தமிழக அரசிடம் முறையிட்டார். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி.பாரத சக்கரவர்த்தி விசாரித்து வந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கிஷோர் குமார் ஆஜராகி வாதிட்டார்.
இந்த வழக்கு மீதான விசாரணை அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நீதிபதி பாரத சக்கரவர்த்தி குற்றம் சுமத்தப்பட்ட கண்ணனுக்கு 10 வருட கால கடுங்காவல் தண்டனையும் மற்றும் 5000 ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10.50 லட்சம் ரொக்கம் வழங்க வேண்டும் என்றும் கண்ணனின் குழந்தைகள் எந்த விதமான தடையும் இல்லாமல் தங்களுடைய படிப்பை தொடர வேண்டும். அதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.