முற்காலத்தில் தான் பெண்கள் ஆண்களிடம் பேசினால் தவறு, ஆண்கள் பெண்களிடம் பேசினால் தவறு, இவ்வளவு ஏன் ஒருவரை, ஒருவர் எதற்கு பார்த்துக் கொண்டாலே தவறு என்ற நடைமுறைகள் இருந்து வந்தது.ஆனால் நாட்கள் செல்ல, செல்ல கல்வி அறிவு வளர, வளர ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை, ஆணும், பெண்ணும் சரிக்கு சமம் என்ற அளவில் தற்போது நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு ஏன் ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக வலிமை குன்றியவர்கள் என்று சொல்லப்படுபவர்கள். ஆனால் ஆண்களை விட பல மடங்கு மனோதிடம் மிக்கவர்கள் தான் பெண்கள். இதனை அவ்வளவு எளிதில் யாராலும் மறுத்து விட முடியாது. அதை பல சமயங்களில் பெண்கள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.
ஆணுக்கு பெண் சரிசமம், ஆணும், பெண்ணும் வேறில்லை என்று வழங்கி வரும் இந்த காலத்தில் கூட ஒரு ஆணிடம் பெண் பேசக்கூடாது என்ற நிலை ஆங்காங்கே காணப்படுகிறது.அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே இருக்கின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வரும் மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் சூடு வைத்ததாக பெற்றோர் காவல் துறையில் புகார் வழங்கியுள்ளனர்.
அதாவது திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வரும் மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை சூடு வைத்ததாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கின்றனர்.திருவண்ணாமலையை மாவட்டமாகக் கொண்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
அதோடு, இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் என்று இருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளியில் கிடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கௌதமி என்ற மாணவி 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி அந்த பள்ளியில் உள்ள மாணவர்களுடன் வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இதனால் தலைமை ஆசிரியர் உஷாராணி அந்த மாணவியை மாணவர்களுடன் பேசக்கூடாது என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து சென்ற 2 நாட்களுக்கு முன்னர் மாணவி வழக்கம் போல பள்ளிக்கு வருகை தந்துள்ளார். வகுப்பறைக்கு வந்த மாணவி பாடங்களை படித்துக் கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு தலைமை ஆசிரியர் உஷாராணி வகுப்பறையை விட்டு வெளியே சென்றபோது, அருகில் உள்ள மாணவர்களுடன் உரையாடிக் கொண்டும், சேட்டை செய்து கொண்டும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்த தலைமை ஆசிரியர் உஷாராணி, அந்த மாணவியை அழைத்து மிரட்டி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து உன்னிடம் எத்தனை முறை தெரிவித்தாலும் சரியாக படிக்காமல் அருகில் உள்ள மாணவர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறாய் என்று தெரிவித்து, மாணவியை பயமுறுத்துவதற்காக அருகிலிருந்த தீப்பெட்டியை எடுத்து, அதிலிருந்து தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தின் அருகே வைத்து தலைமை ஆசிரியை உஷாராணி, மாணவியை பயமுறுத்தி இருக்கிறார்.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதத்தில், திடீரென்று மாணவியின் முகத்தில் தீக்குச்சியின் நெருப்பு பட்டிருக்கிறது. விளையாட்டாக செய்த காரியம் மாணவியின் கன்னத்தில் தீக்காயமாக மாறிவிட்டது, ஆகவே மாணவியின் கன்னத்தில் தீ பட்டதால் மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று இருக்கிறார்.
இதனை கவனித்த அவருடைய பெற்றோர்கள் ஏன் அழுகிறாய்? என்று கேட்டபோது மாணவி பள்ளியில் நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக உடனடியாக மாணவியின் தாய் மணிமேகலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியபோது மாணவியின் தாயிற்கு சரியான பதில் உஷாராணி தரப்பிலிருந்து வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே மணிமேகலை கிராம பொதுமக்களுடன் மங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணியின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து புகார் மனுவை வழங்கினார். இந்த புகார் மனுவை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் உஷாராணியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.