கிராமப்புறங்களில் ஒரு வசனம் இருக்கிறது அதாவது, இந்த வானம் மழை பொழிந்தும் கெடுக்கிறது. வெயில் அடித்தும் கெடுக்கிறது என்று வயதானவர்கள் சிலர் தெரிவிப்பதுண்டு. அந்த வகையில், இந்த வருடம் பருவ மழை காலம் முடிவடைந்த பிறகும் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் பருத்தி விளைவித்த விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வங்கு கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மூலமாக குமரி கடல் பகுதியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை மறுநாள் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல வரும் 25ஆம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மீனவர்கள் மீனைப்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.