ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(30). திருப்பத்தூர் அருகேயுள்ள ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்மொழி (26). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 9 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அருண்மொழி திடீரென்று கர்ப்பமடைந்திருக்கிறார்.
மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த வேல்முருகன் குழப்பமடைந்துள்ளார். எப்படி திடீரென்று கர்ப்பம் அடைந்தாய் என்று துருவித்துருவி கேட்டுள்ளார். அப்போது அருண்மொழிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததும் கோபமடைந்த வேல்முருகன், மனைவி அருண்மொழியிடம் தகராறு செய்துள்ளார். கருவை கலைத்து விடுமாறும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறும் கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த அருண்மொழிக்கும் வேல்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருண்மொழி திடீரென்று மாயமாகயுள்ளார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்காததால் வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்மொழியை தேடிவந்தனர். பின்னர் கள்ளக்காதலனுடன் அருண்மொழி இருப்பதை கண்டுபிடித்து அழைத்துவந்து வேல்முருகனிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது தாய் சின்ன பாப்பாதனது மகள் அருண்மொழியை திருப்பத்தூர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
மனைவியை சமாதானப்படுத்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் அவரது மனைவியை கை ,வாய், கழுத்து என்று பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அருண்மொழி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வேல்முருகன் பைக்கில் தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்த திருப்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருண்மொழியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் வேல்முருகனை தீவிரமாக தேடிய காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.