உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ளவர் நவீன் குமார். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவரின் மகள் ஒருவரை காதலித்தார், இது தெரிந்த நவீன் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பல முறை எச்சரித்தும், அவரது மகள் எதையும் கண்டு கொள்ளாமல், அவர் காதலித்தவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதை கண்ட அவரது தந்தை நவீன் குமார் ஆத்திரமடைந்தார்.
இந்நிலையில், நவீன் குமாரின் மகளுக்கு காலில் அடிபட்டதாக கூறி அருகில் இருக்கும் ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளார். அவரது மகள் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த பொழுது, அங்கு குரங்கு வந்ததால், அதை பார்த்து பயந்து மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் காலில் அடிபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது. இதை தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்துகள், மற்றும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, அந்த பெண்ணின் உடலில் பொட்டாசியம் குளோரைடு ஊசியை யாரே செலுத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்திற்கு டாக்டர்கள் தகவல் அளித்தனர்.
இதை தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர், சிசிடிவி கேமராக்க்களை ஆய்வு செய்தனர். அப்போது டாக்டர் உடையில் மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைவதை கண்டுபிடித்தனர். மேலும் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு வார்டுபாயாக வேலை பார்க்கும் நரேஷ் குமார் என்பவர் டாக்டர் உடை அணிந்து, அந்த பெண்ணின் அறைக்குள் சென்றது தெரிய வந்தது.
அதன் பிறகு நரேஷ் குமாரை விசாரணை செய்ததில், அந்த பெண்ணுக்கு பொட்டாசியம் குளோரைடு ஊசியை செலுத்தியதை ஒப்புக்கொண்டார். மேலும் பெண்ணின் தந்தை நவீன் குமார் அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து அந்த பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும்படி கூறினார். அதனால் தான் அந்த பெண்ணுக்கு விஷ ஊசி போட்டேன் என்று நரேஷ் குமார் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், பெண்ணின் தந்தை நவீனை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மகள் காதலிப்பது அவருக்கு பிடிக்காததால், காதலை கைவிடும்படி பலமுறை கூறினேன், இருந்தும் கேட்கவில்லை. எனவே, நரேஷ் குமாருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து தனது மகளை விஷ ஊசி போட்டு கொல்ல சொன்னேன், என்று பெண்ணின் தந்தை ஒப்புக்கொண்டார். இந்த திட்டத்திற்கு, ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து. பெண்ணின் தந்தை நவீன் குமார், வார்டு பாய் நரேஷ் குமார், ஹாஸ்பிடல் ஊழியாரான பெண் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விஷ ஊசி போடப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.