உதயநிதி என்னிடம் வந்து காதலை சொன்னவுடன் அரசியல் பின்னனியுள்ளவர் என்பதால் பிற்காலத்தில் இவரும் அரசியல்வாதியாக மாற வாய்ப்பிருப்பதாக கூறி அவரது காதலை நிராகரித்துவிட்டேன்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் தமிழ் திரையுலகில், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலினுடைய மனைவி, கிருத்திகா. அரசியல் குடும்பத்தின் மருமகள், உதயநிதி ஸ்டாலினின் மனைவி என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி கடந்த 2013-ஆம் வருடம் வெளிவந்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர், தனது முதல் படத்திலேயே மக்களுக்கு பிடித்தார் போல் நல்ல ‘கமர்ஷியல்’ கதையாக வணக்கம் சென்னையை உருவாக்கியிருந்தார். இந்த படம் தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இயக்கிய படம் விஜய் ஆன்டனி நடித்த காளி. படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படத்தில் ஆங்காங்கே ஒரு சில குறைபாடுகள் இருந்ததால் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு படங்கள் எதையும் இயக்காமல் இருந்த கிருத்திகா உதயநிதி, இப்பொழுது பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இதில் காளிதாஸ் ஜெயராம், 96 புகழ் கெளரி கிஷன், தான்யா ரவிசந்திரன் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் பேப்பர் ராக்கெட்டின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெப்சீரிஸ், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
உதயநிதியும் கிருத்திகாவும் நீண்ட நாள் காதலித்து திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். காதல் குறித்து கேட்க்கப்படும் கேள்விகளுக்கு இருவரும் வெட்கப்பட்டு பதில் அளிப்பது ஒரு தனி அழகு தான். உதயநிதியிடம் ஏன் இன்னும் உங்கள் மனைவியின் இயக்கத்தில் நீங்கள் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, மாஸ் ஹீரோக்களுக்கு இரண்டு மூன்று கதாநாயகிகளுடன் கதைகளை வைத்திருக்கும் கிருத்திகா, தனக்கு மட்டும் ஹீரோயினே இல்லாத க்ரைம் திரில்லர் கதையைத்தான் சொல்வார் என உதயநிதி அடிக்கடி தமாஷாக சொல்வார்.
இந்நிலையில், தற்பொழுது பேப்பர் ராக்கெட்டின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, அது பற்றிய நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் கலந்து பங்கேற்று வருகிறார். அப்படியொரு நேர்காணலின் போது, உதயநிதி மீது எப்படி காதல் வந்தது என்ற கேள்விக்கு கிருத்திகா ஒரு ஷாக்கான பதிலை கொடுத்துள்ளார். உதயநிதி என்னிடம் வந்து காதலை தெரிவித்தபோது அரசியல் பின்னனியுள்ளவர் என்பதால் பிற்காலத்தில் இவரும் அரசியல்வாதியாக மாற வாய்ப்பிருப்பதாக கூறி அவரது காதலை நிராகரித்துவிட்டேன்.
பிறகு அவர் அப்படியெல்லாம் அரசியலுக்கு போக மாட்டேன் என்று சொல்லி சத்தியம் செய்தார். பார்க்க அப்பாவி போல் பாவமாக இருந்ததால் நானும் காதலில் விழுந்து விட்டேன். ஆனால் இப்போதோ, எதை செய்ய மாட்டேன் என்று சொன்னாரோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று சிரித்துக்கொண்டே ஜாலியாக பதில் சொல்லியிருக்கிறார் கிருத்திகா.