சென்னை ஆவடி, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மேகா ஸ்ரீ (30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., பட்டப்படிப்பை முடித்து விட்டு , சென்னை அடையாறு ஐ.ஐ.டி.யில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு பயிற்சிக்காக வந்துள்ளார். அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மேகா ஸ்ரீ, நேற்று காலை ஆவடி, இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதை தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர், இளம்பெண் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஆவடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி ரயில்வே காவல்துறையினர், இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து இளம்பெண் குறித்து விசாரித்ததில், அவரது கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அவரை அடையாளம் கண்டனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி ரயில்வே காவல்துறையினர், ஓடும் ரயிலில் சென்ற போது தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மாணவி மேகா ஸ்ரீ இறந்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று ஆவடி ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.