திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடை தெருவில் பகவான் மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் கண்ணன் (53). இவருடைய மகன் சூரிய பிரகாஷ்( 23) உள்ளிட்ட இருவரும் இணைந்து அந்த கடையை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்களின் வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலை மற்றும் 1000 வருடங்கள் பழமையான செப்பு நாணயங்கள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் கும்பகோணம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இன்று அதிகாலை கண்ணன் வீட்டிலிருந்து சிலை வாங்க வருவதை போல நடித்து வீட்டிற்கு நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 1000 வருடங்கள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை ஒன்று 1/4 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன், வெங்கல சிலை மற்றும் 1000 வருடங்கள் பழமையான முக்கால் கிலோ எடை கொண்ட 2 செப்பு நாணயங்கள், 1 காலச்சக்கரம் உள்ளிட்டவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, சூரியபிரகாஷிடம் நடத்திய விசாரணையில் மன்னார்குடி திருமை கோட்டையில் அகஸ்தியர் கோவில் கட்டுமான பணி நடந்து வருவதாகவும், அந்த கோவிலை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து சிலை மற்றும் செப்பு நாணயங்களை வாங்கி விற்பதற்காக வீட்டில் பதுங்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இந்த சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
அதோடு இதில் மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மன்னார்குடியில் சிலையை விற்பனைக்காக வழங்கிய மாரியப்பன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்த இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள்.