மும்பை, மலாடு ஹோட்டலில் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் உடல் மீட்பு
மும்பை மலாடு பகுதியில் உள்ள அக்சா லாட்ஜில் நேற்று முன்தினம் ஒரு ஆணும் பெண்ணும் வந்து தங்கி இருந்தனர்.அந்த பெண் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த பெண்ணுடன் வந்த ஆண் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். உடல் கூறு ஆய்வின் முடிவில் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அப்பெண் கோரேகாவ் பகத்சிங் நகரில் வசித்து வரும் அமல்மேரி சார்லி(47) என்பதும், விதவையான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருக்கு காந்திவிலி தானுக்கர்வாடியை சேர்ந்த வீட்டு வேலை செய்து வருபவரான அமித் புவட் (36) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் அடிக்கடி அவர்கள் இருவரும் லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கமாக இருந்துள்ளது. அப்படி அக்சா லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அமல்மேரி சார்லியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிசென்றது தெரியவந்தது. இதையடுத்து காந்திவிலியில் பதுங்கி இருந்த வாலிபர் அமித் புவடை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.