ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அறிக்கை 2023 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை அறிக்கையை இன்றைய தினம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் உலக நாடுகளின் மக்கள் தொகை தொடர்பான விபரங்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விடவும் 29 லட்சம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி என்று தெரியவந்துள்ளது. அதேபோல சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என்றும் தெரியவந்துள்ளது. ஐநா சபையின் இந்த அறிக்கையின் படி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வித்தியாசம் சற்றேறக்குறைய 29 லட்சம் என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், 18 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் 26 சதவீதம் பேர் 10 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அதேபோல 68% பேர் 15 வயது முதல் 64 வயது வரையில் இருப்பவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல 7 சதவீதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஐநா சபையின் இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகில் அதிக இளம் தலைமுறையினரை கொண்ட நாடாக மாறி இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 15 முதல் 24 வயதுடையோர் 26 சதவீதம் அதாவது நாட்டில் சற்றேற குறைய 37 கோடி பேர் இளம் தலைமுறையினர் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் என்று கூறப்படுகிறது அதேபோல சீனாவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சற்று ஏறக்குறைய 20 கோடி பேர் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரம் இந்தியாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 7 சதவீதம் பேர் தான் இருக்கிறார்கள்.
அதாவது இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் தான் முதியவர்கள் அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை 2030 ல் இந்தியா முந்திவிடும் என்ற நிபுணர்கள் கூறினார்கள், அதன் பிறகு 2027 ஆம் ஆண்டில் முந்திவிடும் என்று கூறினார்கள், அதன் பிறகு இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வந்த வேகத்தை கவனித்த நிபுணர்கள் 2025 ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்திவிடும் என்று தெரிவித்தார்கள். ஆனால் தற்போது நிபுணர்களின் கணிப்புகளை அனைத்தையும் தவிடுபொடியாக்கி 2023 ஆம் ஆண்டிலேயே இந்தியா மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சி இருக்கிறது.