மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க நினைத்து பல வழிமுறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி முதலீடு செய்யும் போது அதில் பல ஆபத்துகள் இருக்கும் அதனை நன்றாக உணர்ந்து முதலீடு செய்வது மிகவும் அவசியம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வி. இவருடைய கணவர் இசையாஸ், ஜெயசெல்வி அதே கிராமத்தைச் சேர்ந்த அமலாமேரி மற்றும் அவருடைய உறவினர்களிடம் ஏலச்சீட்டு கட்டி முடித்திருக்கின்ற நிலையில், தனக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 38,66,650 பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகவலன் அவர்களிடம் புகார் வழங்கினார்.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் விரைவாக விசாரணை நடத்த கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் குற்றப் பிரிவு காவல் துறையினரால் விசாரணை செய்யப்பட்டது. அந்த விசாரணையில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றியதுடன் பணம் கட்டி அவர்கள் திரும்ப கேட்கும்போது அவர்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அமலாமேரி மற்றும் அண்ணாதுரை என்கின்ற குழந்தை ராஜ் உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் தலைமறைவாக இருக்கின்ற மற்ற இரண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றனர்.