கோயமுத்தூர் மாவட்டம், ரத்தினபுரி அருகேயுள்ள ஆறுமுக கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் பூபாலன். இவர் கட்டிட கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பூபாலன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான சூலூரில் தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வாரம் ஒருமுறை ரத்தினபுரிக்கு வந்த பூபாலன் குழந்தைகளுடனும், மனைவியுடனும் தங்கியிருந்து விட்டு, குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந் நிலையில், பூபாலன் குழந்தைகளை பார்க்க கடந்த செவ்வாய்க்கிழமை ரத்தினபுரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ஷாலினிக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூபாலன், இதுபற்றி ஷாலினியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
அந்த சன்டையில், ஷாலினி எதிர்பாராத விதமாக பூபாலனை தாக்கியுள்ளார். இதனால் பூபாலன் காயமடைந்துள்ளார். பக்கத்தில் உள்ளவர்கள், இது பற்றி போலீசில் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பூபாலனை மீட்டு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் இடையில் இறங்கி சென்றுள்ளார். இதற்கிடையே, கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் நான்கு மணியளவில் குடி போதையில் வீட்டிற்கு வந்த பூபாலன் வீட்டில் இருந்த ஷாலினியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஷாலினியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், கத்தியால் குத்தி மனைவியை கொன்று விட்டதாக எண்ணி வேதனையடைந்த பூபாலன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.