மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் ஓசர் வீரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி வாகத்( 21) 9 மாத கர்ப்பிணியான இந்த பெண்மணிக்கு சென்ற வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு உண்டானதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு இருந்து ஆட்டோவின் மூலமாக தவா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு ஆட்டோ மூலமாக சிறிது தூரம் சென்று அங்கிருந்து 3.2 கிலோமீட்டர் தூரம் மீண்டும் நடந்து வீட்டிற்கு வந்துள்ளார். வெயிலில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அவரை காசாவில் இருக்கின்ற அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கிருந்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவசர ஊர்தி மூலமாக காசா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனாலும் செல்லும் வழியிலேயே அந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் உயிரிழந்தது. கர்ப்பிணி பெண் 7 கிலோ மீட்டர் தூரம் வெயிலில் நடந்து வந்ததால் உடல் நலம் மோசமாகி உயிரிழந்ததாக மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் பாததே தெரிவித்திருக்கிறார்.