எப்போதும் நம்முடைய வீடுகளிலோ அல்லது தோட்டத்திலோ வேலைக்காக ஆட்களை சேர்க்கும்போது அவர்களுடைய பின்னணி என்ன? அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? அவர்களுக்கு குற்றப் பின்னணி இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து அவர்கள் தொடர்பாக முழு விவரங்கள் தெரிந்த பிறகுதான் அவர்களை நாம் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் பல விபரீதங்களை நாம் சந்திக்க நேரலாம்.
அப்படி ஒரு சம்பவம் தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அடுத்துள்ள சிறுசேரி பகுதியில் வசித்து வருபவர் திருமூர்த்தி, இவர் தன்னுடைய மாமியார் ராஜலட்சுமி(62) என்ற மூதாட்டிக்கு உதவியாக இருக்க ஒரு பணிப்பெண்ணை நியமனம் செய்தார்.
ஆனால் அந்தப் பணிப்பெண் அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, அந்த மூதாட்டிக்கு அதிகளவு நீரிழிவு மாத்திரைகளை வழங்கி மயக்கம் அடைய செய்துவிட்டு அந்த மூதாட்டி அணிந்து இருந்த தங்க நகை, வளையல்கள் உள்ளிட்ட 8 ½ சவரன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாழம்பூர் காவல் நிலையத்தில் திருமூர்த்தி புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கேகே நகரை சேர்ந்த பணிப்பெண் விஜயலட்சுமி(46) என்ற பெண்மணியை செல்போன் சிக்னலை வைத்து தாழம்பூர் ஆய்வாளர் வேலூர் நேற்று கைது செய்தார் அவரிடமிருந்து 8½ சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அந்தப் பணிப்பெண் விஜயலட்சுமி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டு வேலைக்காக ஆட்களை தேர்வு செய்யும் போது அவர்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் அவர்களின் குற்றப் பின்னணிகள் தொடர்பாக முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு பணியில் சேர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கு தாழம்பூர் காவல்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.