தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக போதை பொருட்களை உபயோகத்தை தடுப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்று கொண்ட ஒரு சில தினங்களில் தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் அவர் அப்படி அறிவிப்பை வெளியிட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது.
ஒருபுறம் அதனை தடுப்பதற்கு அரசும் காவல்துறையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி வருகிறார்கள்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தை அடுத்துள்ள சித்தாமூர் அருகே இருக்கின்ற புளியங்கரனை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (57). இவருடைய 2வது மகன் ஆனந்த் (26) மூத்த மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற நிலையில், ஆனந்த் வேலைக்கு செல்லாமல் தந்தை மற்றும் அண்ணன் உள்ளிட்டோர் கொண்டுவரும் பணத்தை வெட்டியாக செலவு செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் போதைப் பொருளுக்கு அடிமையான ஆனந்தை அந்த பழக்கத்திலிருந்து வெளியே வருமாறு பலமுறை தந்தை சேகர் தெரிவித்தும் ஆனந்த் அதனை செவி கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு போதை மயக்கத்தில் வீட்டிற்கு வந்த மகனை தந்தை சேகர் வன்மையாக கண்டித்து இருக்கிறார். இதன் மூலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.ஆகவே மது போதையில் இருந்த ஆனந்த் தன்னுடைய தந்தையை தகாத முறையில் வசைபாடியது மட்டுமல்லாமல் அவரை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட தந்தை சேகர் மகன் தாக்குவதற்காக எடுத்து வந்த கட்டையை அவரிடம் இருந்து பிடுங்கி அவரையே தாக்கி இருக்கிறார். இதனால் ஆனந்த் தலை, கால் போன்ற பகுதிகளில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த அவர்கள் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் உடனடியாக சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்