தற்போதைய இளம் தலைமுறையினர் பல சமயங்களில் யோசிக்காமல் செய்யும் விஷயங்களால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள், இளம் தலைமுறையினர் பொறுமையாக எதையும் யோசிப்பதில்லை.அதேசமயம் திருமணம் ஆன இளம் தம்பதியரிடம் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
ஒரு பெண் திருமணமாகி தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்து விட்டால் அந்த கணவர் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அந்த பெண் அடங்கி தான் நடக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்னமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகிவிட்டால் ஒன்று கணவன் செல்வதை கேட்டு கணவனுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், இல்லை என்றால் மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுக்கு கீழ்படிந்து மருமகளாக வருபவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற சாம்பிரதாயம் முற்காலத்தில் கடைபிடிக்க பட்டிருக்கலாம்.ஆனால் அதையே இன்னமும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
அனைவரும் படித்து முன்னேறி விட்ட நிலையில், யோசனை திறன் என்பது எல்லோருக்கும் இருக்கும். அப்படி இருக்கும் போது நான் சொல்வதை தான் நீ கேட்டு நடக்க வேண்டும் என்று யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது அப்படி கட்டாயப்படுத்தினால் ஒன்று கட்டாயப்படுத்துபவர்கள் அசிங்கப்படுவார்கள், அப்படியில்லை என்றால், யாரை கட்டாயப்படுத்துகிறார்களோ அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவுகளை மேற்கொள்வார்கள்.
அப்படி ஒரு சம்பவம் தான் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சார்ந்தவர் ராகவேந்தர் இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார்.இவருக்கும், ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அபிராமி என்ற இளம் பெண்ணுக்கும் சென்ற வருடம் திருமணம் நடந்தது.
ஆனால் திருமணம் நடைபெற்ற ஒரு சில தினங்களிலேயே ராகவேந்தரின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் கடந்த மூன்று மாத காலமாக குடும்பத்தில் உண்டான பிரச்சனையின் காரணமாக அபிராமி தன்னுடைய தாய் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
அதேபோல நேற்று முன்தினமும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற அபிராமி உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்து வீட்டிற்கு வந்த நிலையில், கணவர் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.இந்த சம்பவம் தொடர்பாக அபிராமி குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்கவே, இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி கொள்ள அபிராமி குடும்பத்தினர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று அவருடைய உடலை பார்த்து கதறி அழுது உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ராகவேந்தர் குடும்பத்தினர் வழங்கிய மன உளைச்சலின் காரணமாக தான் அபிராமி தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னுடைய மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அபிராமியின் தந்தை மற்றும் சகோதரி உட்பட உறவினர்கள் 50க்கும் அதிகமானோர் ஈரோடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சு வார்த்தையில் சரியான நடவடிக்கை மேற்கொள்வதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய உயிரிழப்புக்கு கணவரின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்டோர்தான் காரணம் என்று தெரிவித்து வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் கௌசல்யா நேரியில் சென்று ஆய்வு செய்து மருத்துவமனையில் இருதரப்பு குடும்பத்தினர் மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அபிராமி பேசிய வீடியோ பதிவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ஆபிராமியின் உறவினர்கள் அவருடைய சடலத்தை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று தெரிவித்து பிணவறையில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் தன்னுடைய தற்கொலைக்கு கணவரின் குடும்பத்தார் தான் காரணம் என்று தெரிவித்து வீடியோ பதிவு செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் இடையிலும், அந்தப் பகுதி மக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.