பருவமழை காலங்களின் போது வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவுவது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் இந்த காய்ச்சல் சீசன் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாதம் வந்த பின்னரும் காய்ச்சல் பாதிப்புகள் குறையவில்லை.
இதனால் தமிழக முழுவதும் 1000 பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தமிழக அரசு நடத்தி இருக்கிறது. அந்த விதத்தில் சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கிற காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சென்னை முழுவதும் சுமார் 200 பகுதிகளிலும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 800 பகுதிகளிலும் இந்த முகாம் நடைபெறுவதாக தெரிவித்திருக்கிறார். H3N2 வகை வைரஸ் காய்ச்சல் பரவும் தன்மை கொண்டிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மகக்கவசம் அணிந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதோடு, தமிழகத்தில் ஒமிக்ரான் வகை நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு நடுவே H3N2 இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது நாடு முழுவதும் 90 பேர் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.