தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு போதிய தெளிவு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தார். கடந்த 24 ஆம் தேதி வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை சிலர் அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் தன்னுடை தொகுதியை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரள மாநிலம் வந்துள்ளார்.
நேற்று வயநாட்டை வந்தடைந்த ராகுல் காந்தி, தாக்குதலுக்கு உள்ளான தனது அலுவலகத்தை பார்வையிட்டு பின்னர் தனது கட்சியின் நிர்வாகிகளுடன் உரையாடினார். இதன் பின்பு ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்க சென்ற ராகுல் காந்தி இன்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவருடைய உரையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த போதுமான தெளிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்தில் உள்ள ஆழத்தை பிரதமர் மோடி இதுவரையிலும் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் உணர்ந்துள்ளேன். இந்திய தொழிலாளர்களின் சந்தையை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மாற்றியுள்ளது என்பதை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. இந்த திட்டம் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பெரிய பாதுகாப்பு என்பதையும், இது மக்களுக்கு கை கொடுக்கும் கடைசி வழியாக உள்ளது என்பதையும் பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்த திட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.