நாமக்கல் மாவட்டம் மோகனூர் புது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித்(2) என்ற இரு குழந்தைகளும் இருந்தனர்.
இந்த நிலையில், குணவதிக்கும் அவருடைய தந்தையான கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட குணவதி தன்னுடைய 2 குழந்தைகளையும் வீட்டருகே இருக்கின்ற கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு அதன் பிறகு தானும் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தகவலறிந்த மோகனூர் காவல்துறையை சேர்ந்தவர்கள் 3 பேரின் உடலையும் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு நடுவே மகள் உயிரிழந்த சோகத்தில் தந்தை கேசவன் அதிக அளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 2 குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மோகனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.