புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் அருகில் இருக்கும் வைத்திக்கோவிலில் வசிப்பவர் வடிவேலு (76). இவர் ஒரு விவசாயி. வடிவேலுவின் மனைவி மாரிக்கண்ணு (55). இவருடைய பெரியப்பா சின்னையா மகன் குணசேகரன் (49). இவருக்கு கல்யாணம் ஆகவில்லை. மேலும், இவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மாரிக்கண்ணு தனது வீட்டின் அருகே வசித்து வந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில், தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை குணசேகரன் வீட்டு வழியே மாரிக்கண்ணு சென்றபோது அவரை அழைத்த குணசேகரன் தினமும் எனக்கு சாப்பாட்டில் செய்வினை செய்து தானே கொடுக்கிறாய் என கூறி தனது கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென அவரது வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுத்த அவரது இடது கையிலும் வெட்டியுள்ளார். இதில் மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் குணசேகரனை பிடிக்க முயன்றபோது, கிட்ட வந்தால் உங்களையும் குத்தி விடுவேன் எனக்கூறி கத்தியை வீசிவிட்டு குணசேகரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த உடையாளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாரிக்கண்ணுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய குணசேகரனை காவல்துறையினர் தேடிய போது அந்த வழியாக சென்ற பேருந்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். இதை தொடர்ந்து, கீரனூர் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி குணசேகரனை கைது செய்தார். குணசேகரன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் கைப்பற்றினா். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.