தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பா. ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கருமன் கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் பா.ஜனதா ஆதரவாளரான கல்யாண சுந்தரம் (55) என்பவரது வீட்டில் கடந்த 24 ஆம்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மண்டைக்காடு காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சி. சி. டி. வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் டூ-வீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய காவல்தூறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஷமில் கான் (25) என்பவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஷமில்கானிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 3வது நாளாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பாதுகாப்பு பணியில் சுமார் 1200 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.