புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. கூட்டத் தொடரை சுமுகமான முறையில் நடத்துவது பற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி போன்றோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநிலங்களவையை சுமுகமான முறையில் நடத்துவது குறித்து, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம், துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு இன்று கூட்டியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரலாத் ஜோஷி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பந்தோபாத்யாய் மற்றும் அப்னா தல் எம்.பி. சுப்ரியா பட்டேல் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில், எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ராஷ்டீரிய லோக் தள கட்சி எம்.பி. ஜெயந்த் சவுத்ரி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா போன்றோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளனர்..